Friday, February 23, 2018

ஆளும் கட்சியை மீண்டும் ஆட்சியில் அமரவைப்பார் கமல் .........

ஆளும் கட்சியை மீண்டும் ஆட்சியில் அமரவைப்பார் கமல் .........


நடக்கும் ஆட்சி சரியில்லை ; நாடு இன்னும் வளரவில்லை
நானே ஆட்சி அமைக்கிறேன் ; நல்லாட்சி மக்களுக்கு கொடுக்கிறேன் என நாட்டில் நடிகர்கள் பேட்டிகொடுப்பதும் , அரசியலில் இறங்கி போட்டிபோடுவதும் , கரையேறுவதும் கரைந்துவிடுவதும் காலம் காலமாய் கண்கள் காணும் கண்காட்சி ..... அந்த வரிசையில் ஆழ்வார்பேட்டை  ஆண்டவரும் அடங்கியது அதிசயத்திலும் அதிசயமே ......

அரிதாரம் பூசாமலேயே  ஆஸ்கருக்கு போட்டிபோடும் நடிப்புலக சக்ரவர்த்திகள் பலர் அரசியலில் இருக்க ; அரிதாரம் பூசியும் நவரசங்களை நாராசமாய் நடிப்புலகில் காட்டிக்கொண்டிருக்கும் நடிகர்களும் , அரசியல்  நடிப்புலக சக்ரவர்த்திகளோடு நாற்காலிக்கு போட்டிபோட துணிந்துவிடுகையில் . அரிதாரத்தையும் , அரசியலையும் கடந்து அனைத்தறிவையும் தன்னகத்தேகொண்டு அமைதியாய் ஆராய்ச்சிகளை அவ்வப்பொழுது கலையுலகத்தில் செய்தவரே கமல் .

நேற்று வந்த நடிகரின் அரசியல் ஆசையை ஆர்வமாய் புதிர்போட்டு புகைத்துவிடும் பல புலனாய்வு பத்திரிக்கைகளும் ஆண்டவரிடம் அந்த ஆர்வத்தை காட்டுவதில்லை  காரணம் உலக நாயகன்  உலகத்தை எவ்வாறு அறிந்திருக்கிறாரோ அவ்வாறே உலகமும் அவரையும் அவரின் தேவையையும் அறிந்திருக்கிறது . இன்னும் சொல்லப்போனால் புதுமுக நடிகனுக்கும் முளைக்கும் ரசிகர்மன்றங்களும் அதன் நிர்வாகிகளும் ; அரசியல் நிர்வாகிகள் ஆக ஆசைப்பட்டுக்கொண்டிருக்க்கும் இக்காலத்தில் கமலின் அரசியல்வாதி அவதாரம் அவரது ரசிகர்களுக்கே ஆகப்பெரிய அதிர்ச்சியும் ஆச்சரியமும் கலந்ததுதான் . என்னதான் அவரது ரசிகர் மன்றம் மக்கள் மன்றமாக கட்டமைக்கப்பட்டு பல நல்லகாரியங்கள் செய்திருந்தாலும் அவர்கள் அரசியலுக்கு அப்பாற்பட்டேயிருந்து வந்தனர்   அதற்குக்காரணம் கமல் அவர்கள் , தனது ரசிகர்களை  அரசியல் ஆசை தூபம் போட்டு வளர்க்கவில்லை மாறாக அவர்களது  சினிமா ரசனையை மாற்றியமைக்க முயற்சித்துக்கொண்டிருந்தார் . (சினிமாவில் பிணைந்திருக்கும் வணிக சூத்திரம் அறிந்தும் அதற்கு அப்பாற்பட்டு அவ்வப்பொழுது தான் கொண்ட கருத்துக்களை நேரடியாகவோ , மறைமுகமாகவோ தனது திரைப்படங்களில் வெளிப்படுத்திகொண்டேயிருந்தார் அதில் முன்னோடியாகவும் திகழ்ந்தார் ).

நானறிந்தவரையில் கமல்  இனம் , மதம் , மொழியை முன்னிறுத்துவதைகாட்டிலும் உயிருக்கும் , மனித உணர்வுக்கும் அதிக முக்கியத்துவம் கொண்ட நபராகவே தன்னை முன்னிறுத்தினார் . அதனால்தான் போர் நிறுத்தம் வேண்டி ஈழத்தமிழ்களுக்காக நடிகர் சங்கம் உண்ணாவிரதம் இருந்தபோது, அங்கே தமிழர்கள் கொல்லப்படுவதை நிறுத்த வேண்டி அனைவரும் முழக்கமிட்டபோதும் கமல் மட்டும் " உலகில் எந்த மனித உயிர் கொல்லப்படுவதையும் ஏற்க முடியாது" என்று வரையறைக்குள் சிக்காமல் முழக்கமிட்டார் . மேலும் எந்த நடிகரும் நடிக்க தயங்கும் HIV விளம் பர பிரச்சாரத்தில் ஈடுபட்டார் , அவ்வப்பொழுது கேன்சரால் ஆட்கொள்ளப்பட்டவர்களுக்கு கவுதமியை உதாரணம் காட்டி தெம்பூட்டினார் . இந்த உயிரின் மதிப்பையும்   மனித உணர்வின் முக்கியத்துவத்தையும் தனது திரைப்படங்களில் வெளிக்காட்ட தவறியதேயில்லை கமல்.

இவையனைத்தையும் அரசியல் சமிக்கைகள் அல்லாமலே ; அரசியல் ஆசை தூபம் ரசிகர்களுக்கு விசாமலே வெளிப்படுத்திவந்தார் அதனாலோ என்னவோ வெள்ளித்திரையிலும் சரி வெளித்திரையிலும் சரி ஈர்ப்பு விதி ரஜினியை விட கமலுக்கு சற்று குறைவே ......ஆனால் கமல் ஆகச் சிறந்த அறிவாளி என்பதை அனைவரும் அறிவர் ; அறிவாளிக்கு அரசியல் லாய்க்கு  இல்லையென்பதாலோ இல்லை அறிவாளிக்கு அரசியலும் தெரியும் அதன் ஆழமும் புரியும் என்பதாலோ தெரியவில்லை கமல் அரசியலை தொடாமலே தொலைவில் நின்றார் . ஆனால் அவ்வப்பொழுது அரசியல் அவரை தொட்டது
சில தலைவர்கள்மூலம் தனது படங்களுக்கு தலைவலியாக .....அதில் விஸ்வரூபமெடுத்தது கமல் இன்றெடுத்திருக்கும் விஸ்வரூபத்திற்கு தூபமாய் பலரால் நம்பப்படுவது விஸ்வரூப படப்பிரச்சனையே .....

என்னதான் அரசியல் பொதுநலத்தை சார்ந்ததென்றாலும் கடுகளவேனும் சுயநலத்தை சாராமல் அந்த பொதுநலம் வெளிப்படுவதே இல்லை என்பதே பொதுக்கருத்து .
உலகில் ஆசையே கூடாதென புத்தர் ஆசைப்பட்டார் என்பதில் தொடங்கி எண்ணற்ற பொதுநலன்கள் ஏதோ ஒருவகை சுயநலத்தின் வெளிப்பாடே ஆகும் .இது ஆண்டவனுக்கும பொருந்தும் ஆழ்வார்பேட்டை ஆண்டவருக்கும் பொருந்தும்

தாமரைக்கும், நீருக்கும் இருக்கும் தொடர்புபோல ரஜினிக்கும் அரசியலுக்கும் இருக்கும் தொடர்பே அவருக்கு பல பிரச்சனைகளை தந்தாலும் அந்த அரசியல் செல்வாக்குத்தான்  அவரை பல பிரச்சனைகளிலிருந்து காக்கிறது என கமல் எண்ணினாரோ என்னவோ சண்டியர் படப்பிரச்சனையின்போது  "தன்னை சீண்ட வேண்டாம் ; தன் பின்னேயும் ஒரு  கூட்டமிருக்கு என லேசாக தனக்கிருக்கும்  அரசியல் ஆயுதத்தை வெளிப்படுத்தினார் . பின்னாளில் சண்டியர் விருமாண்டியாக மாற கமலும் சகஜமான கலைஞனின் மனநிலைக்கே மாறினார் . ஆயினும் ரஜினிக்கு எப்படி அரசியல் பட்டும்படாமல் பின்தொடர்ந்ததோ அதுபோல கமல் படங்களுக்கு பிரச்சனைகள் அவ்வப்பொழுது பட்டும் படாமல் பின்தொடரத்தான் செய்தது .
அதில் முத்தாய்ப்பாக  விஸ்வரூபமெடுத்தது  விஸ்வரூபமே . பின்னாளில் "தாயில்லாமல் நானில்லை"என தனது வார்த்தை ஜாலங்களில் பட்டிமன்ற நடுவராக அத்தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் சமாதானம் பேசினாலும் . ஆண்டவர்  காத்திருந்து  ஆக்ரோஷப்பட்டதென்னவோ இரண்டாண்டு கழித்துவந்த 2015 மழைவெள்ளத்தின் போதுதான். அந்த கோபம் ஒரு பொதுநலத்தின் வெளிப்பாடாயிருந்தாலும் தன் பாக்கெட்டிலிருந்து பணம் போய்விடுமோ என்கிற சுயநலத்தின் ஊடாக வெளிப்பட்ட பொதுநலமோ அல்லது "ஓடு மீன் ஓட உறுமீன் வரும் வரை சாலக் காத்திருக்குமாம் கொக்கு" என்கிற பழமொழிக்கு ஏற்ப ஆளும் கட்சி மீது மக்கள் அதிருப்தியிலிருக்கும் சமயம் பார்த்து  சம்மட்டையால் அடிக்க நினைத்த சுயநலத்தின் ஊடாக வெளிப்பட்ட பொதுநலமோ என்பது ஆண்டவருக்கே வெளிச்சம் .


அதன்பின்னும் சிலகாலம் ஆண்டவரிடம் அமைதி நிலவிட எதிர்பாராத சம்பவமாக படப்பிடிப்பின்போது அவரது கால்முறிவு ஏற்பட அதனிமித்தம் அவருக்கு ஓய்வு தேவைப்பட நாட்கள் நகர்கிறது ....அதைத்தொடர்ந்து அவருடன் இணைந்து வாழ்ந்திருந்த கௌதமி பாரத பிரதமர் மோடியை 2017 யோகா தின விழாவை முன்னிட்டு "யோகத்தான்" என்கிற நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தும் பொருட்டு ஒத்துழைப்பு வேண்டி சந்திக்கிறார் . அடுத்த சில நாட்களில் 13 ஆண்டுகாலம் இணைந்து வாழ்ந்திருந்த கமலும் கவுதமியும் பிரிகின்றனர் . அதைத்தொடர்ந்து அம்மாவின் மறைவு அரங்கேறிவிட அதற்கு
  "சார்ந்தோர் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்"என நம்மவர் ட்விட்டரில் இரங்கல் தீட்டி விட அது சர்ச்சை தீயை பற்றவைக்கிறது (கமல் வருவதை முன்கூட்டியே சொல்லும் தீர்க்கதரிசி என்பர் பலர் ) 
அதைத்தொடர்ந்து வந்த பல டிவீட்கள் தமிழகம் அறிந்தாலும் அதன் அர்த்தங்கள் அறிவது அவ்வளவு எளிதல்ல . ஆயினும் ஆண்டவர் விடுவதாய் இல்லை அவரது ஓய்வு காலத்தை சரியாக நோட்டம் பிடித்த இந்நாட்டில் ஒளிபரப்பாகும் பன்னாட்டு தொலைக்காட்சியொன்று  அவ்வப்பொழுது தொழிலாளியாய் கம்யூனிசம் பேசும் நம்மவரை முதலாளிக்கெல்லாம் முதலாளியாய் பெரிய முதலாளியாக்கி அழகு பார்த்தது . அதனிமித்தம் அனைத்திலும் வித்தியாசம் காட்டும் நம்மவர் வெள்ளித்திரையில் அரசியல் பன்ச் வசனம் பேசும் நடிகர்களுக்கு மத்தியில் இந்திய தொலைக்காட்சிகளில் முதன்முறையாக சின்னத்திரையில் அவ்வப்பொழுது அரசியல் பஞ்ச் பேசி அசத்தி காட்டினார் . அந்த நூறுநாள் வெற்றித்திரைப்படம் இவரது பேச்சாற்றல் மற்றும் அறிவுக்கூர்மையை மக்களுக்கு எடுத்துக்காட்டியது மட்டுமல்லாமல் அதிரடிக்காரனை விட ஆண்டவரே அரசியலுக்கு சரியானவர் என மக்கள் மனதில் அழுத்தமாக பதியப்பட்டது . அதன்பின் வாரப்பத்திரிக்கையின் கேள்வி -பதில் மூலம் அரசியல் புதிர் போட்டுக்கொண்டிருந்த நம்மவரின் ஆழ்வார்பேட்டை அரசியல் சில காலம் அமைதியாக . அந்த இடைப்பட்ட காலத்தை ஆன்மிக அரசியல் ஆர்ப்பரித்தது . புயலுக்கு முன்னே அமைதி என்கிற பழமொழிக்கு ஏற்ப அந்த அமைதிக்கு பின்னே அவசரமாய் திடீரென  உதித்தது  நம்மவரின் அரசியல் கட்சி மக்கள் நீதி மய்யமாய் (சக நிகழ்வுகளின் கோர்வையே இப்பத்தி)


அரசியலில்  ஜெயிக்க பலசமயங்களில் தேவை நிலைப்பாடே தவிர உண்மை நிலையல்ல உதாரணமாக சில சமயங்களில் இருபக்கங்களிலும் நியாயம் இருக்கக்கூடும் ஆயினும் நாம் ஒருபக்க சார்பு நிலைப்பாடே எடுக்கமுடியும் அதற்குகாரணம்  அப்படி எடுத்தால்தான் நம்மால் அரசியலில் நிலைக்கமுடியும் . அதனால்தான் பல சமயங்களில் அரசியலில் மனசாட்சிக்கு இடமில்லாமல் போகிறது . மனசாட்சியுள்ள பலருக்கு அரசியலே இல்லாமல் போகிறது . அரசியல் களம் அறிஞர்களுக்கான இடமில்லை அந்த களத்தில் விளையாட தெரிந்த பேரறிஞர்களுக்கான இடம் . இதுவரையில் கலையுலகில் அறிஞராய் அறியப்பட்ட கமல் பேரறிஞராய் சாதிப்பாரா என்பது நம்மவரை சுற்றியுள்ள பல டாலர் கேள்வி .....

 அரசியலில் மாற்றம் வேண்டிவரும் கமல் அது என்ன மாற்றம் என சொல்லாமல் வந்திருப்பது ஏமாற்றமே (ஒருவேளை விஜயகாந்த் போல தனது திட்டங்களை சொன்னால் ஆளுங்கட்சி காப்பியடிக்கும் என்கிற அச்சமோ ? )
 உண்மையை சொல்லவேண்டுமானால் அறிவியலில் மாற்றம் வராமல் அரசியலில் மிகப்பெரிய மாற்றம் வராது இதை அரசியல்வாதிகள் அனைவரும் அறிவர் கமல்போன்ற அறிஞர்களும் அறிவர் . இங்கே மக்கள் விரும்பும் மாற்றமும் அரசியல்வாதி சொல்லும் மாற்றமும் ஒன்றுக்கு ஒன்று முரண்பட்டது என்பதே யதார்த்த உண்மை ..மக்களிலும் மாற்றம் என்பது ஆளுக்கொன்றாக வேறுப்படுகின்றது .... ஆயினும் சொல்லிவைத்தாற்போல் ஆட்சிக்கு வர நினைக்கும் அனைத்து புது அரசியல்வாதிகளும் சொல்வது அனைவருக்கும் தரமான இலவச கல்வி ,அனைவருக்கும் தரமான இலவச மருத்துவம் , அனைவருக்கும் வேலை  போன்ற சம்பிரதாய சொற்பொழிவுகளே ...( இதை ஏன் எந்த ஆண்ட ஆளும் கட்சிகளும் சொல்வதில்லை காரணம் ஆட்சி என்பது வேறு அரசியல் வாக்குறுதி  என்பது வேறு ....) ஆனால் இதையே கமலும் வரி மாற்றாமல் சொன்னது அரசியலில் அவருக்கு விழுந்த முதல் அடி.. எதுவெல்லாம் நல்லதோ அதுவெல்லாம் எனது கொள்கை என்பது நல்லதே ஆனால் எது நல்லது என கமல் நினைக்கிறாரென்று  மக்களுக்கு விளக்கமாய் சொல்லியிருந்தால் மிகவும் நல்லது காரணம் இங்கே ஒரு பாமரன் பார்வையில்  நாட்டிற்கு நல்லதெனப் படுவது  ஒரு பொருளாதார நிபுணரின் பார்வையில் நாட்டிற்கு தீங்காகப்படலாம் ஒரு தொழிலாளிக்கு தீயதாகப்படுவது ஒரு முதலாளிக்கு நல்லதாகப்படலாம் ஆனால்  அதேசமயம் இந்த நால்வரும் நல்லவர்களாகவேயிருக்கலாம் . இப்படிப்பட்ட  சூழ்நிலையில் முடிவெடுக்க நிச்சயம் இவருக்கு ஒரு நிலைப்பாடு வேண்டுமே .....

நான் ஆரம்பத்திலே சொன்னது போல் கமல் இனம், மதம் , மொழி  ஆகிவற்றுக்கு அப்பாற்பட்டவராகவே தன்னை காட்டிக்கொள்ள விரும்புபவர் .அந்தவகையில் கமலின் கட்சிக்கொடியான  ஆறுகைகள் ஆறு மாநிலத்தை குறிப்பதென்பதே மிகப்பெரிய அரசியல் ராஜதந்திரம்தான்.வரும்காலங்களில் ஒருவேளை அரசியலில்  ரஜினியை எதிர்க்க வேண்டிவந்தால் தனக்கிருக்கும் மிகப்பெரிய பலம் தமிழன் என்கிற அடையாளம் ஆனால் அதேசமயம் தமிழ் உணர்வுள்ளவர் அனைவரும் தனக்கே ஓட்டளிப்பார்கள் என்பது நிச்சயமில்லை. ஒருவேளை சீமான் போன்றோரோடு கூட்டணியமைத்து தன்னை தமிழ்தேசியவாதி வரையறைக்குள் அடைத்துக்கொள்ளும் பட்சத்தில் பிறமொழி பேசும் மக்களின் வாக்குகள் தானாக ரஜினிக்கு சென்றுவிடும் வாய்ப்புமுள்ளது என்பதை அறிந்தே ஒரு வட்டத்துக்குள் சிக்காமல் தப்பிக்கவே இந்த தென்னக மொழி இணைப்பு குறியீடு என்றுகூட சொல்லலாம் (அதேசமயம் தேர்தல் போரின் கடைசி ஆயுதமாக தமிழனே ஆளவேண்டும் என்கிற ஆயுதத்தை கமல் எடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை ) அதேநேரம் அது என்ன ? தென்னக மொழிக்கான இணைப்பு மட்டும் அப்படியென்றால் மார்வாடிகளின் ஓட்டுகள் வேண்டாமா என கேட்கலாம் நம் மக்களின் ஏகபோக கோபமே இந்த மத்திய அரசின் இந்தி திணிப்பின் மீதுதான் அந்த வாக்குகளை அறுவடை செய்ய திமுக இருந்தாலும் அங்கே கூட்டணியில் இருப்பது காங்கிரஸ் அதற்கும் பாஜகவிற்கும் ஹிந்தி திணிப்பில் பெரிய வேறுபாடில்லை ஆக அந்த ஓட்டுக்களை குறிவைத்தே இந்த ஏற்பாடு .  . (குறிப்பு :- ரஜினியும் , கமலும் இணைந்து செயல்ப்படவும் வாய்ப்புள்ளது அதேசமயம் இருதுருவ அரசியலை மேற்கொள்ள நினைத்து களத்தில் எதிர் எதிராக நிற்கவும் வாய்ப்புள்ளது )


கமலிடம் நான் கண்ட,  இன்னும் காணும் பிழையாக நான் கருதுவது நிலைப்பாடெடுப்பதில் நீடித்திருக்கும் குழப்பம் ... உதாரணம் .அவர் அதிமுகவை தவிர யாரையும் பகைத்து கொள்ளவிரும்பவில்லை ஆனால் அது கமலின் வீரத்தை பறைசாற்றுவதை காட்டிலும் தலைவனில்லாதவீட்டில் தடியெடுத்த கதையைத்தான் காட்டுகிறது . என்னளவில் தமிழகத்து மக்களுக்கு மாநிலரசின் மீதுள்ள கோபத்தைவிட மத்திய அரசின் மீதே அதிக கோபமுள்ளது அதை தற்பொழுதுதான்  சரியாக டிடிவி புரிந்துகொண்டுள்ளார் ஆனால் கமலோ மத்திய அரசை எதிர்க்க தயக்கம் காட்டுகிறார் அது தயக்கமா அல்லது அதுதான் அவரது நிலைப்பாடா  அல்லது அவர்களை இப்பொழுதே எதிர்த்தால் தன்னால் சுதந்திரமாக செயல்படமுடியாது அதனால் ஒரு மூன்றாவது அணி அமைத்து தேர்தல் நெருக்கத்தில் அவர்களை வலுவாக எதிர்கொள்ளலாம் என்கிற எண்ணமா ? அது ஆண்டவருக்கே வெளிச்சம் . (கெஜ்ரிவால் , பினராய்விஜயன் , சந்திரபாபு நாயுடு போன்றவர்களை அரவணைப்பதும் , கர்நாடகத்திலிருந்து தண்ணீரென்ன ரத்தமே தானமாக வாங்கித்தருகிறேன் போன்ற வசனங்களும், கம்யூனிஸ்ட் தலைவர்களோடு இணக்கமாக போவதும் மூன்றாவது அணிக்கான சமிக்கைகளாகவும் இருக்கலாம் )

கமல் நடிக்கப்போகும்  இந்தியன் 2 திரைப்படம் மூன்றாண்டுகளுக்கு பின்பு வரும் சட்டமன்ற தேர்தலுக்கு நெருக்கத்தில் வருமானால் அவரது தேர்தல் பிரச்சார அரசியலுக்கு நல்ல அடித்தளமாக அமையும் எப்படி விஜயகாந்துக்கு ரமணா அமைந்ததோ அப்படி
ஒருவேளை அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தலும் வரலாம் என்கிற நிலையிருக்கையில் கமல் இந்தியன் 2 படத்தில் கையொப்பமிட்டிருப்பது சில சந்தேகங்களை எழுப்பத்தான் செய்கிறது கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் மக்கள் நலக்கூட்டணி சார்பாக முதல்வர் வேட்பாளராக நிறுத்தப்பட்ட விஜயகாந்த் வாக்கெண்ணிக்கை முடிந்ததும் ஏற்கனவே என்ன தேர்தல் முடிவுவரும் என தெரிந்திருந்ததுபோல மறுநாளே "தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா " என்கிற தனது மகனின் திரைப்படத்தில் தானும் நடிக்க படப்பிடிப்பில் கலந்துகொண்டாரே அதுபோல கலந்துகொள்வாரோ .நம்மவர் கமல் .  நான் ஏன் இதை சொல்கிறேனென்றால் பல ஆண்டுகாலமாக ரசிகர்களுக்கு அரசியல் சமிக்கைகள் காட்டி மன்றங்களை திறம்பட கட்டமைத்து  ,  அரசியல் ஆழம்பார்க்க உள்ளாட்சி தேர்தல்களில் மன்றநிர்வாகிகளை சுயேட்சையாக நிற்கவைத்து  அதன்பின் அரசியலுக்கு வந்த விஜயகாந்தே தன்னிலை என்னவென்று நன்கு அறிந்திருக்கையில் . ரசிகர்களுக்கு அரசியல் வாசமே காட்டாமல் ரசிகர்களை வைத்து மன்றங்களில் அரசியலுக்கேதுவான கட்டமைப்பை அமைக்காமல் , திடீரென அரசியல் பிரவேசம் செய்து ஆட்சி பிடித்துவிடலாம் என  சொன்னால் சாதாரண ரசிகனே நம்பமாட்டான் . கலைஞானி கமல் நம்பிவிடுவாரா ..........
 (இன்னும்சொல்லபோனால் விஜயகாந்த் போல கமலுக்கு கிராமப்புற ரசிகர்மன்ற அடித்தளம் பலமாக இல்லை இவரது பெருவாரியான ரசிகர்களெல்லாம் படித்த மேல்தட்டு மக்களே)


அரசியலை பொறுத்தவரை நாம் காணும் சம்பவம் ஒன்று அதற்கு  பின்னால் நடக்கும் சம்பவம் இரண்டு அதனால்தான் இது சாணக்கியர்கள் ஆடும் ஆட்டம் என்போம் . இப்பொழுது கமல் ஏன் எதிர்க்கிறார் , எதற்கு  எதிர்க்கிறார் என்பதையெல்லாம் புறம்தள்ளிவிட்டு ஒரு முக்கியமான விஷயத்தை பாப்போம் அதாவது கமல் யாரை எதிர்க்கிறார் ஆளும்கட்சியை எதிர்க்கிறார் அப்படி அவர் எதிர்ப்பதால் யாருக்கு லாபம் எதிர்கட்சிக்குதான்  லாபம் இல்லையா ?
ஆனால் நான் சொல்கிறேன் அவர் அப்படி ஆளுங்கட்சியை எதிர்ப்பதால் ஆளுங்கட்சிக்குத்தான் லாபம் அது எப்படியென்றால் ஒருவேளை கமல் அரசியலில் இல்லாதிருந்தால் இப்போதிருக்கும் சூழ்நிலையில் டிடிவி யை தவிர்த்து பெரிய எதிர்கட்சியென்றால் அது திமுகதான் ஆக ஆளுங்கட்சியை எதிர்ப்பவர்களின் பெருவாரியான ஓட்டு திமுகவுக்கே செல்லும் அது திமுகவின் நிரந்தர ஓட்டுவங்கியோடு சேரும்பொழுது திமுகவின் வெற்றிக்கு தானாகவே வழிகொடுக்கும் (இப்பொழுது டிடிவியும் இருப்பதால் அந்த எதிர்ப்பு ஓட்டுக்கள் பிரியும் திமுகவிற்கு ஓரளவிற்கு பின்னடைவை தரும்) ஒருவேளை இந்த ஆட்சி கலையாமல் பாராளுமன்ற தேர்தலில் பாஜகவும் அதிமுகவும் கூட்டுவைக்கிறது என வைத்துக்கொள்வோம் அப்பொழுது ஆளும் கட்சிக்கு எதிரான பெருவாரியான ஓட்டுக்கள் ஒரு சேராமல் மூன்றாக பிரிந்து ( டிடிவி அதிமுகவோடு இணையாமல் இருந்தால் ) குறைந்தளவு ஓட்டை பெற்றிருந்தாலும் அதிமுகவே வெற்றிபெறும் அதன் மூலம் பாஜகவும் தமிழகத்திலிருந்து சில நாடாளுமன்ற உறுப்பினர்களை பெறும் .அதற்கு சிறந்த உதாரணம் கடந்த சட்டமன்ற தேர்தல் அதில் அதிமுகவுக்கும் திமுகவிற்கும் ஓட்டளவில் 1% சதவீதம் தான் வித்தியாசம் ஆனாலும் ஆட்சியமைத்ததென்னவோ ஆளுங்கட்சிதான் . காரணம் ஆளும்கட்சியின் எதிர்ப்பு ஓட்டுக்கள் மக்கள் நலக்கூட்டணிக்கும் , பாமகவிற்கும் , நாம் தமிழருக்கும் பிரிந்து சென்றதே ஆகும் .

 இறுதியாக கமல் கட்சி தொடங்கிய மேடையில் என்னால் காணமுடிந்தது அரசியல்வாதி கமலைவிட பிக் பாஸ் கமலையே . படத்திற்கு படம் வேறுபாடு காட்டும் கமல் இதில் வேறுபாடு காட்ட மறந்துவிட்டாரா அல்லது வெற்றி சூத்திரம் என்பதால் மறுத்துவிட்டாரா.......அது ஆண்டவருக்கே வெளிச்சம்

இறுதியின் இறுதியாக கமல் ஓட்டை பிரிக்க வந்த ஆயுதமா  அல்லது அரசியலில் கோட்டையை பிடிக்க வந்த ஆண்டவரா ......அது .காலத்துக்கே வெளிச்சம் .                      

 நன்றி !


இப்படிக்கு
டி.ஆர். உதயகுமார்
 


Wednesday, January 31, 2018

சரியா ? தவறா ?மகேஷ் (29) ,விஜய் ( 26 ) , கணேஷ்(23) மூவரும் ஒரே அலுவலகத்தில் பணிபுரிந்துகொண்டு  சினிமா ரசனையால் ஒன்றிணைந்து ; மகேஷ் இயக்குனராகவும் , விஜய்  ஒளிப்பதிவாளராகவும் , கணேஷ்  நடிகனாகவும் வருங்காலத்தில் வர ஆசைபட்டுக்கொண்டு அதை அடைந்திடும் சமகால வழியாய் அவ்வப்பொழுது குறும்படங்களை  படைத்துக்கொண்டு நாளை நமதேயென நாட்களை நகர்த்திக்கொண்டிருக்கும் நகர்ப்புற நடுத்தரவாசிகள்

காட்சி  1 :

 " இந்த உலகத்திலேயே பொண்ணுங்கள மாதிரி கேப்மாரிங்க யாரும் இல்லை பொண்ணுங்க எல்லாரும் ஒன்னாநம்பார் FRAUD " என்று  தன் இரு கைகளை  நீட்டி மடக்கி பேசிமுடித்து, ஆசுவாசப்படுத்திக்கொள்ள தன் முன்னாடியிருந்த டேபிளில் தண்ணீர் நிரம்பிய கண்ணாடி டம்பளரை குடிப்பதற்காக மகேஷ் கையிலெடுக்க ."அப்படி எல்லாரையும் சொல்லிடமுடியாது ஜி பொண்ணுங்கள்ளியும் நல்லவங்க இருக்காங்க" என்று மகேஷுக்கு  வலப்புறமாக அமர்ந்திருக்கும் மெல்லிய உடல்வாகுகொண்ட அரும்பு மீசை முளைத்தும் அதை மழுப்பி கல்லூரி முதலாமாண்டு படிக்கும் மாணவனைப்போல் காட்சிதரும் கணேஷ் தன் கையிலிருந்த கண்ணாடி டம்பளரை டேபிளில் வைத்தவாறே சொல்லிமுடிக்க ."இத்தன நாள் இல்லாம திடிர்னு பொண்ணுங்களுக்கு சப்போர்ட் பண்றான்னா யாரையோ லவ் பண்றான்னு அர்த்தம் யார்ரா அந்த பொண்ணு " என்று மகேஷ் தனது சவரன் செய்யாத முரட்டு தாடியை தடவியவாறே , க்ளீன் ஷேவ் செய்து மீசையை அளவாய் வடிவமைத்துகொண்டு  தனக்கு எதிரே அமர்ந்திருக்கும் விஜய்யிடமிருந்து வலப்புறமாக அமர்ந்திருக்கும் கணேஷிடம் தனது பார்வையை திருப்ப

"சொல்லிட்றா இன்னும் ஏன் மறைச்சிகிட்டு" என்று விஜய்யும் தனது பார்வையை கணேஷிடம் திருப்பி தலையை அசைத்தவாறு  கேட்க ."அப்ப உனக்கும் தெரியுமாடா" என்று மகேஷ் ஒருவித ஆச்சரியத்தோடு விஜயையை பார்த்து வினவ

"எனக்கு இவ பாக்குறானுதா தெரியும் ஆலு யாருண்லா தெரியாது" என்று விஜய் பதிலளிக்க ; ஜி நா உங்களுக்கு FACEBOOKல போட்டோ காட்ல என்று கணேஷ் அதிர்ச்சியோடு விஜய்யை பார்த்து வினவ ; சரி அத விட்றா எத்தனமாசமா அந்த பொண்ண பார்த்துட்டுயிருக்க  என்று  கணேஷை மடக்கி மகேஷ் கேள்வி எழுப்ப

கணேஷ் : மூணு மாசமா , ஆனா நா மொதல்ல அவள பாக்கல அவதா என்ன பாத்தா

மகேஷ் : அப்டியா ?! இதென்னடா புதுசா இருக்கு

கணேஷ் : ஆமா ஜி

மகேஷ் : எங்க? எப்போ ?

கணேஷ் : மூணுமாசத்துக்கு முன்னாடி நா FIRST ஷிப்ட் வந்தப்போ ஒருநாள் மதியம் CAFETERIYAவுல சாப்டுட்டுயிருந்த , திடீருனு என் எதிர்ல அவளும் அவ ஃபிரெண்டும் வந்து உக்காந்துட்டாங்க ..... நா தட்ட பார்த்து சாப்டுட்டே இருந்தா ; அவ என்னடான்னா என்னையே சாப்புட்ற மாதிரி பார்த்துட்டுயிருந்தா ....

விஜய் : நீ தட்ட தானே பாத்துட்டுயிருந்த அப்பறம் எப்படி அவ உன்ன  பாக்குறான்னு  உனக்கு தெரிஞ்சிது

கணேஷ் : பொண்ணுங்களுக்கு 2000 கண் இருக்கும்பொழுது நமக்கு 1000
கண்ணுகூடவா இருக்காது

விஜய் ஏதோ கண்களாலேயே சொல்வதுபோல் மகேஷை பார்க்க ; மகேஷோ தனது தாடியை தடவியவாறு புன்முறுவல் எய்தினான் .

கணேஷ் : அப்பறம் நா தட்டு எடுத்துட்டு ரெண்டாவது சாப்பாடு வாங்கலாமுன்னுபோனா  அவளும் பின்னாடியே வந்து நிக்குறா ....

விஜய் : டேய் உன்னமாதிரி அவளும் ரெண்டுதட்டு சோறுத்தின்னா உன்ன லவ் பண்றான்னு அர்த்தமா .... பேசுறாம்பாரு கோ-இன்சிடெண்ட்டா நடந்ததெல்லா ஒரு இன்சிடெண்ட்டா சொல்லிக்கிட்டு இதுல டயலாக் வேற ஆயிரம் கண்ணு நா லவ் பண்ற அமிஞ்சிக்கற பொண்ணுன்னு

கணேஷ் : ஜி நா சொன்னா  நீங்க நம்பமாட்டீங்கன்னு தெரியும் ஆனா ஒரு பொண்ணு casualலா பாக்குறாளா ஏதோ காரணமா பாக்குறளானு தெரியாமகூடவா இருப்பேன்னு நினைக்குறிங்க ?

மகேஷ் : பின்னயென்னடா மதியநேரத்துல CAFETERIYAALA இடங்கிடைக்கறதே பெரியவிஷயம்  எந்த டேபிள்-CHAIR காலியாகுதோ அங்க உக்காரப்போறாங்க அப்படி இடங்கெடைச்சு எதேர்சையா வந்து உக்காந்த பொண்ண என்னதா பாக்குறான்னு சொன்னா என்ன அர்த்தம் ? சரி, அப்டியே பாத்தாகூட அது லவ் ஆகிடுமா ?...ஏன் ஆம்பளைங்க மட்டும்தா சைட் அடிக்கணுமா ....பொண்ணுங்க அடிக்கக்கூடாதா

கணேஷ் : ஜி , ரெண்டு வருஷமா இந்த ஆபிஸ்ல ஒர்க் பண்ற ; தெனைக்கும் இதே CAFETERIYAலதா சாப்புட்ற ; நீங்க என்னோட ஷிப்ட்ல இருந்திங்கன்னா உங்ககூட சேர்ந்து சாப்புட்ற இல்லன்னா நீங்க சொன்னமாதிரி எந்த டேபிள் காலியா இருக்கோ அந்த டேபிள்ள உக்காந்து சாப்புட்ற அங்க என் எதிர்ல வேற பொண்ணுங்களே இருந்ததில்லையா இல்ல அப்படி எதிர்ல இருந்த எல்லாபொண்ணுங்க பின்னாடியும் திரிஞ்சிருக்கேனா சொல்லுங்க ஜி ? அது ஈர்ப்பு  அது எல்லார் மேலையும் வராது அது யார் மேல வரும்னும் சொல்லமுடியாது எனக்கு இவ மேல வந்திருக்கு அவ்ளோதா . அதுமட்டுமில்ல அவ என்ன பாக்குறான்னாலே அவளுக்கு என்ன புடிச்சிருக்குன்னுதானே அர்த்தம் எம்மேல ஒரு ஈர்ப்பிருக்குனு தானே அர்த்தம் எனக்கும் அவள புடிச்சிருக்கு அதனால அந்த ஈர்ப்ப லவ்வா மாத்த ட்ரை பண்ற அதுலயென்ன தப்பிருக்கு என்று  தனது நீண்ட உரையை நிகழ்த்தி முடிக்க வெயிட்டர் பில்லை கொண்டுவந்து டேபிளில் நுழைக்க அதை அமைதியாய் தன்பக்கம் இழுத்துக்கொண்டு பில்லை உற்று நோக்க முற்பட்டான் கணேஷ் .

அந்த இடைப்பட்ட தருணத்தில்  மகேஷ் விஜய்யை இம்முறை ஏதோ கண்களாலேயே சொல்வதுபோல் பார்க்க ;விஜய்யோ தனது இருபுருவங்களையும் உயர்த்தி ஆச்சரியம் விலகாது மெல்ல சிரித்தான் .

பில் புத்தகத்தில் உணவு உண்டதிற்கான பணத்தை வைத்துவிட்ட கணேஷ் மெல்ல விஜயையும் , கணேஷையும் தலைதூக்கி பார்க்க ...

மகேஷ் : சரிடா , உன்னோட செகண்ட் மீட்டிங்க இன்னொரு நாள் கேட்டுக்குற பட் நீயெப்போ உன்னோட லவ்வ ப்ரொபோஸ் பண்ணப்போற

கணேஷ் : அதுதான் ஜி பயமா இருக்கு

மகேஷ் : பயமாயிருக்கா எங்ககிட்டமட்டும் ஈர்ப்பு ஈயம்னு கிழிக்குற அந்த மாதிரி நாலு டயலாக் அங்க எடுத்து விடவேண்டியதுதானே

 கணேஷ் : அது வந்து ஜி

மகேஷ் : இந்த இதயம் முரளி சீனே இங்க வேணா நாளைக்கே நீ அவகிட்ட டைரக்ட்டா ப்ரொபோஸ் பண்ற அவ்வளுவுதான் . இன்னிக்கு நீ எங்களுக்கு கொடுத்தது ட்ரீட்டே இல்ல நாளைக்கு நீ  ப்ரொபோஸ் பண்ணி அந்த பாசிட்டிவான ரிசல்ட எங்க கிட்ட சொல்ற பாத்தியா அதுதா எங்களுக்கு நீ தர உண்மையான பர்த்டே ட்ரீட்...டாட் .என்று சிட்டி ரோபோவாய் சொல்லிமுடிக்க

 ஜி ...ஜி .....என்று கணேஷ் கெஞ்சல் குரலில் மெலிதாய் முணுமுணுக்க அதை காதிலே வாங்காத வண்ணம் மகேஷ் அவ்விடம் விட்டு நகர தொடங்க அவனை விஜய்யும் பின்தொடர மெல்ல எழுந்து அவ்விடம்விட்டு நகரத்தொடங்கினான் கணேஷ் .


(காட்சி 2 தொடரும் ....)Tuesday, January 9, 2018

ரயிலில் சில திருநங்கைகளின் வழிப்பறி

        
  (படத்திற்கும் பதிவிற்கும் சம்மந்தமில்லை )


  இரக்கப்பட்டு கொடுக்கவேண்டியதை வழிப்பறிப்போல் பறிப்பது என்ன நியாயம். அதுவும் அன்றாட ரயில் பயணங்களில் இதை வாடிக்கையாக்கி கொண்ட சில திருநங்கைகளை யார் தட்டி கேட்பது . எப்பொழுதாவது இரயில் பயணம் செய்வோருக்கு கையேந்தும் மாற்று திறனாளிகளுக்கும்  , திருநங்கைகளுக்கும்  கருணைப்பட்டு காசு கொடுப்பது அவர்களுக்கு ஒர் புண்ணியம் செய்த ஆத்மத்ரிப்தியை தரும் ஆனால் அனுதினமும் அதே இரயிலில் அலுவலகம் செல்வோர் பெரும்பாலானோர்க்கு அந்த ஆத்மதிருப்தி அமைவதில்லை காரணம் அவர்கள் அப்படிபட்ட பெரும்பாலானவர்களை அனுதினமும் பார்க்கிறார்கள் . பாத்திரம் அறிந்தே ஈகை செய்கிறார்கள் ஆயினும் மாற்றுதிறனாளி வேண்டியும் ஈகை செய்ய இயலார் பலர் திருநங்கைகளின் கை தட்டல் சத்தத்திற்கு அலறிவிடுகிறார்கள் என்பதே யதார்த்த உண்மை . அச்சமயத்தில் வெகுசிலரை தவிர அனைவரின் கரங்களும் சில்லரையை தேட தொடங்குகிறது , சில்லரையில்லாதோரோ தான் வைத்திருக்கும் நோட்டை ஈகை செய்ய வலுக்கட்டாயமாக தயாராகிவிடுகின்றனர்.இது கேட்பதற்கு சில்லரை விஷயமாக தென்பட்டாலும் இது மிகப்பெரிய உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தும் பிரச்சனை . 

அதே இரயிலில் பத்து நிமிடம் முன்பு ஈகை வேண்டி வரும் ஒரு முதியவருக்கோ அல்லது ஒரு மாற்றுதிறனாளிக்கோ கொடுக்கப்படாமல் எனது விருப்பத்தை சார்ந்திருக்கும் எனது காசு அடுத்த பத்து நிமிடங்களில் கட்டாய வழிப்பறியாக என்னிடமிருந்து பறிக்கப்படுவது இவ்வுலகில்  வலியதே வாழுமோ என்கிற ஐயம் என்னைபோல பலருக்கும் எழாமல் இருக்காது ஆனால் நிச்சயம் இது வலிமை சார்ந்த பிரச்சனையில்லை  அவமானத்தை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லாத ஒரு யதார்த்த குடும்ப  ஆணின் பலவீனத்தோடு பணம் செய்யும் முயற்சி இது. இதில் சில திருநங்கைகள் கட்டாயமாக கேட்பதில்லையெனினும் பலரும் அடாவடி செய்தே வசூலிக்கிறார்கள் அதிலும் அவர்கள் பெரும்பாலும் குறிவைப்பது வாலிபர்களை என்பது அனைவரும் அறிந்த சத்தியம் அதிலும் வடநாட்டுவாலிபர்கள் என்றால் பணம் பறிக்காமல் விடுவதே இல்லை (அதற்குக்காரணம் அவர்கள் பஞ்சம் பிழைக்க வந்தவர்கள் கேட்க நாதியற்றவர்கள் நம்மை என்னசெய்துவிடமுடியும் என்கிற ஆழ்மன அலட்சியத்தை தவிர வேறொன்றுமில்லை )

எனக்கிருக்கும் மிகப்பெரிய கேள்வியே எதை எதையோ கேள்வியெழுப்பும் பலகட்சிகள் ஏன் இதை கேள்வி எழுப்புவதில்லை அனுதினமும் நடக்கும் இச்சம்பவத்தை ஏன் யாரும் கண்டிக்கவில்லை (சில வருடங்களுக்கு முன்பு இரயில்வே அதிகாரிகள் இப்படிப்பட்ட சம்பவங்களை கண்டித்ததாக நாளிதழில் படித்த நினைவு) இங்கே திருநங்கைகள் சமமாக பார்க்கப்படவேண்டும்  என்பதில் மாற்றுக்கருத்தில்லை அவர்களுக்கு இழைக்கப்படும் சமூக அநீதியையும் மறுப்பதற்கில்லை ஆனால் அநீதிக்கு நீதி வழிப்பறியா. இயலாதவர் ஈகை பெறுவதில் தவறில்லை அதை வற்புறுத்தி பெறுவது தவறில்லையா? ? 

Saturday, January 6, 2018

இலுமினாட்டி கம்முனாட்டி

நா தெரியாமதா கேக்குற ஒருத்த தப்பு செய்யுறானா அது எல்லாருக்கும் தெரியுற மாதிரியா செய்வா , உலகத்துல முதலாளிக்கு முதலாளி இருக்கத்தா செய்றா வல்லவனுக்கு வல்லவ இங்க இருக்கா (அதுக்குமேல வல்லவனா ஆண்டவனும் / இயற்கையும் இருக்கு) இது பொருளாதார உலகத்தோட யதார்த்தம் ஆனா அப்படி இருக்குறவ இலுமினாட்டியாதா இருப்பானான்னு தெரியல அப்படியே இருந்தாலும் அவ பிக் பாஸ் ஒத்த கண்ணு , பாபா முத்திரை போல குறியீடெல்லா வச்சுகிட்டு மக்களுக்கு அதை வெளிப்படையா காட்றதுனால அவனுக்கு என்ன  கிடைக்கபோகுதுன்னும் புரியல (ஒருவேளை பழைய படத்துல விஷம்னு BOTTLE ல எழுதிவெச்சிருப்பாங்களே அப்படியா........ இல்லனா நம்பியார் காலத்துல அடியாட்கள் ஒரே UNIFORMல YES BOSSனு சொல்லுவாங்களே அப்படியா ..... அப்படினா இலுமினாட்டி இன்னும் அப்டேட் ஆகலையா ) ஒருவேளை நா அந்த குறியீடெல்லா காமிச்சு நா அவங்க ஆளுன்னு சொல்லிட்டா எனக்கென்ன சலுகை தருவாங்கன்னும் தெரியல இதைவிட உச்சபட்சமா கமல், மணிரத்னம் படங்கள்ல நாசூக்கா சில விஷயங்கள குறியீட்ல சொல்ற மாதிரி மகேஷ்பாபுவோட ஸ்பைடர்  போன்ற சில படங்கள்லையும் இலுமினாட்டி குறியீடு இருக்காமே ! அது எதுக்கு?  ஒருவேளை இது நம்ம சினிமா நடிகருங்க அரசியலுக்கு வர பஞ்ச் பேசுவாங்களே அப்படியா, அப்படியிருக்க வாய்ப்பில்லையே  ஏன்னா ஆல்ரெடி அரசியலும் பெருவாரியான அரசியல்வாதிகளும் அவங்க கண்ட்ரோல் தானே அப்புறம் எதுக்கு தனியா இந்த மார்கெட்டிங் . கடைசியா ஒன்னு புரியுது ஆவிகள் இருக்கோ இல்லையோ அதை விரட்ட ஆட்கள் இருக்காங்க அதுபோல இலுமினாட்டி இருக்காங்களோ இல்லையோ அதை பத்தி விவரமா சொல்ல நிறைய ஆட்கள் இருக்காங்க ...... எதேர்சையா நடக்குற விஷயத்தையெல்லாம் அப்படி இருக்குமோ ஒருவேளை இப்படி இருக்குமோனு ஆராய்ச்சி பண்ணிகிட்டேயிருந்தா ஒரு கட்டத்துல அயற்சிதா மிஞ்சும் .

கலைஞரிடம் கற்க வேண்டிய அரசியல் கல்வி

நாம் கலைஞரை அரசியல் ராஜதந்திரி என்பதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு அவர் எப்பொழுதும் தனக்கு சாதகமான ஒரு விஷயத்தை தற்காப்புக்காக தன்னத்தே வைத்திருப்பார் ; அரசியலில் தனக்கெதிரான ஒரு நிலைவருகையில் ஒருகோட்டை சிறியதாக்க அதனருகே பெரியகோடு ஒன்றை போடுவதுபோல தற்காப்புக்காக தன்னகத்தே வைத்திருந்த தனக்கு சாதகமான ஒரு நிலையை வெளியிட்டு தனக்கெதிராக சுழலும் பாதக நிலையை மழுங்கடித்துவிடுவார்

Friday, January 5, 2018

சீமானுக்கு கடிதம்


சீமான் தன்னை பெரியாரின் பேரன் என சொல்லிக்கொண்ட ஒருத்தருணத்தில் அதை கொச்சைப்படுத்திப்பேசிய ஒரு அரசியல் தலைவரை "நீ உறவு வழி பேரன் நான் உணர்வு வழி பேரன் " என மார்தட்டி மெய்சிலிர்க்க சொன்னார் . ஆனால் உறவால் வேற்றுமொழி தாய் ஈன்றெடுக்க உணர்வால் தமிழ்தாய் கொண்டு வளர்த்தெடுக்கப்பட்டவர்களும் தமிழர்களேயென ஏன் ஏற்க மறுக்கிறார்  என்பது அடியேனின் அன்பானக்கேள்வி .

ஒரு வார்த்தைக்கு நான் வந்தேறியென நீர் முழக்கமிட்டாலும் அந்த வந்தேறி வார்த்தையின் அர்த்தத்தையும் அன்னை தமிழ்கொண்டே அறியும் அடியேன் நான் . யார் வேண்டுமானாலும் வாழலாம் நாங்கள்தான் ஆளுவோம் என்பதே ஆட்சியென்பது  மக்களை ஆளுவதற்குரியது என்கிற தவறான மனப்பான்மையின் வெளிப்பாடாகும் . ஆட்சியானது மக்களை ஆள்வதற்குரியதல்ல மக்களுக்கான சேவைக்குரியது . (ஆட்சியாளர்கள் ஆள்பவர்கள் அல்ல சேவகர்கள் )

இந்த தாய் , இந்த தந்தை , இந்த நிறம் , இந்த மொழி , இந்த ஜாதி , இந்த மதமென யாரும் வேண்டிபிறப்பதில்லை . இந்த சாதியில் பிறந்ததால் இந்த  கோவிலுக்குள் நுழையக்கூடாது என்று சொன்னதற்கும் இந்த மொழியை பூர்வீகமாககொண்டு பிறந்ததால் இந்த பதவிக்கு வரக்கூடாது என்பதற்கும் என்ன பெரியவேறுபாடு உண்டு . இது தீண்டாமையின் மறுரூபமில்லையா ?


பகுத்தறிவுவாதிகளுக்கு ஆத்திகவாதிகள்  கொண்ட நம்பிக்கையிலிருந்து மாறுபாடிருக்கலாம் அது அவர்களது தனிப்பட்ட விருப்பம் சார்ந்தது ஆனால் ஆலயத்தில் நுழைவதென்பது இறை நம்பிக்கைகொண்ட அனைவருக்கான உரிமை சார்ந்தது அதுபோல அரசியலுக்கு வருவதும் வராததும் அவரவர் தனிப்பட்ட விருப்பம் சார்ந்தது ஆனால் அரசியல் நுழைவென்பது  அரசியல் விருப்பம் கொண்ட அனைவரின் உரிமை சார்ந்தது அங்கே அன்பாக எச்சரிப்பதற்கும் இடமில்லை வந்தேறியென  வார்த்தை வசைபாடுவதிலும் அர்த்தமில்லை


இறுதியாக : உங்களது வசீகரிக்கும் பேச்சுக்கு பல லட்ச ரசிகர்கள் உண்டு அவர்களை தொண்டர்களாக்கும் சூத்திரம் உங்கள் கையிலேயே உண்டு

இப்படிக்கு
அன்பு ரசிகன்
டி . ஆர் . உதயகுமார்

எனது முகநூல் முத்துக்கள்

சமூக ஊடகம் சமூக உறவை சுமூகமாக சிதைத்ததென்பதே சமூகத்துக்கு சுமூகமாக சமூக ஊடகத்தின் மூலம் நான் சொல்லும் சேதி


மன்னன் சரியில்லையென மறைப்பதற்கில்லாமல் சொல்லும் துணிவு மண்ணின் மைந்தனும் அவ்வாறே என மறுப்பதற்கில்லாமல் சொல்ல துணிவுண்டோ


இளைஞர்கள் அரசியல் அறிந்திருக்கலாம் அதிலே ஆழ்ந்திருக்கதேவையில்லை


ஐந்தாண்டுக்கு ஒருமுறை தலைவன் மாறினாலும் ஐம்பதாண்டாகியும் தலையெலுத்து மாறவில்லையே


தன் நிலை அறிந்தவன்
இழி நிலை அடையான்


 ஆசையில்லாதவன் அரசியலில் இருப்பதும்
பட்டற்றவன் பணத்தை தேடுவதும் பரிதாபநிலையே


கடந்த காலமும் எதிர்காலமுமே பெருவாரியான நிகழ்காலத்தை நிரப்புகின்றன


நீங்கள் அடுத்தவர்களை உணர்வுபூர்வமாக நேசிக்க உலகம் உங்களை உண்மையாக நேசிக்கும் 

ஆளும் கட்சியை மீண்டும் ஆட்சியில் அமரவைப்பார் கமல் .........

ஆளும் கட்சியை மீண்டும் ஆட்சியில் அமரவைப்பார் கமல் ......... நடக்கும் ஆட்சி சரியில்லை ; நாடு இன்னும் வளரவில்லை நானே ஆட்சி அமைக்கிறேன் ...